பலன்களை அள்ளி தரும் பனை
பனை மரத்திலிருந்து கிடைக்கும் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வியர்வை கொப்பளங்கள் நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும். பனங்கற்கண்டை சாப்பிட்டு வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம் தாகம் போன்றவை நீங்கும். பனங்கிழங்கிற்கு உடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு. பனங்கிழங்கை சாப்பிட்டு வந்தால் உடல் அழகு பெறும். உடல் பலமும் அதிகரிக்கும். பனையிலிருந்து கிடைக்கும் பதநீர் மேக நோயை தீர்க்கவல்லது.அழிவின் விளிம்பில் பனை மரங்கள்
காடுகள் பெருமளவிற்கு அழிக்கப்பட்டதால், பல உயிரினங்களின் உயிர் ஆதாரமாக பனை மரங்களே விளங்குகின்றன. பனையின்வேர் பகுதிகளில் எறும்புகளும், பூச்சிகளும் பல சிறு செடிகளும் வாழ்கின்றன. பனையின் வேர்ப்பகுதியில் விழும் தாவரங்களின் விதைகள் பனையைச் சுற்றியும் ஒட்டியும் வளர்கின்றன. இயற்கையில் ஆலமரங்களும் அரச மரங்களும் பெரும்பாலும் பனையை ஒட்டி வளர்பவையே.பனையின் தண்டுப் பகுதியை ஆதாரமாகக் கொண்டு பல வகையான ஓணான்களும் பல்லி இனங்களும் வாழ்கின்றன. பனையின் கழுத்து பகுதிகளிலும் பனை ஓலைகளிலும் பல வகையான வெளவால்களும் சிறு குருவிகளும் வாழ்கின்றன. ஒரு வெளவால் ஒரு இரவுப் பொழுதில் பல நூற்றுக்கணக்கான ஈக்களையும் கொசுக்களையும் பிடித்து உண்டு விவசாயம் செழிக்க நமக்கு உதவுகிறது.பனையின் தலைப்பகுதியில் அணில்களும் எலிகளும் கூடு அமைத்து வாழ்கின்றன. மேலும் உயரப் பறக்கும் பறவைகளான பருந்துகளுக்கும் வானம்பாடி பறவைகளுக்கும் இருப்பிடமாக பனை விளங்குகிறது. பனை ஓலையின் நுனியில் தூக்கணாங்குருவிகள் தங்களின் சிறப்புமிக்க கூடுகளைப் பெருமளவு அமைத்து கூட்டாக வாழ்கின்றன. பகல் பொழுதில் வயல்களில் இருக்கின்ற பூச்சிகளையும், கூட்டுப்புழுக்களையும் உண்டு விவசாயத்திற்கு பல நன்மைகளைச் செய்கின்றன.ஒரு பனை குறைந்தது 30 அடி உயரத்திற்கு வளருமாதலால் பல உயிரினங்களுக்கு இருப்பிடங்களாகவும் கூடுகளை அமைத்து தங்களது இனத்தை விருத்தி செய்யவும், எதிரிகளிடமிருந்து காக்க உதவும் அரணாகவும் பனை விளங்குகிறது.”இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்ற அடைமொழி யானைக்கு மட்டுமல்ல பனைமரத்துக்கும் பொருந்தும்.கள் தடை செய்யப்பட்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு!
உலகளவில் 108 நாடுகளில் பனை மரங்கள் உள்ளன. எந்த நாட்டிலும் கள் இறக்குவதற்கோ, குடிப்பதற்கோ தடை இல்லை. தமிழகத்தில் மட்டும் தடை உள்ளது. கள் இறக்குவதற்கான அனுமதி இருந்தவரை, அதனால் வருமானம் கிடைத்தவரை பனை மரங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கவலை விவசாயிக்கு இருந்தது. நேரிடையான வருமானம் இல்லையென்றதும் அதன்பிறகு, பனை மரங்களை கைவிட்டு விட்டனர் விவசாயிகள். வறட்சி காரணமாக பனை மரங்களை காப்பாற்ற முடியாமல் செங்கல் சூளைக்கும், சுண்ணாம்பு களவாய்க்கும் எரிபொருளாக வெறும் ரூ.50க்கு விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது வெறும் 5 கோடிதான் உள்ளன. இவையும் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன. பனை விவசாய அழிவுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், சொந்த மரமில்லாததால் பனைமரம் ஏறியவர்கள் வேறு தொழிலுக்குச் சென்று விட்டனர்.சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பூமியின் வறட்சி காரணமாக பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலையில், எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி பனைமரங்கள் வெட்டப்பட்டு, செங்கல் சூளைக்கு எரிபொருளாக லாரிகளில் அனுப்பப்பட்டு வருகின்றன என்றார்.திணைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாகக் கொள்வர் பயன் தெரிவார் -என்ற குறளின்படி எந்தவித செலவுமின்றி வளர்ந்து நிற்கும் சில கோடி பனை மரங்களையாவது பாதுகாக்க வேண்டும். பனையின் பயனைப் பெற புதிய வழிகளை உருவாக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தமிழர்களின் அடையாளமாக உள்ள பனை மரத்தை அழிவின் விளிம்பிலிருந்து மீட்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் விருப்பமாகும்.தமிழர்களின் சொத்தான பனைமரத்தை மீட்டெடுக்கும் முயற்சியை அரசு மேற்கொள்ளவேண்டும்